close
Choose your channels

திரைவிமர்சனம் 'நானும் ரவுடிதான்' - ரசிக்கவைக்கும் ரவுடி

Wednesday, October 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தயாரிப்பாளர் தனுஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன் , நாயகன் விஜய் சேதுபதி மற்றும் நாயகி நயன்தாரா... இந்தக் கூட்டணி அமைந்தவுடன் நானும் ரவுடிதான்` படம் ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுவிட்டது. அனிருத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக, டீசரும் ட்ரைலரும் பார்த்த அனைவரையும் கவர, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் நானும் ரவுடிதான்` படம் எப்படி இருக்கிறது என்பதை அறிய விமர்சனத்தைப் படியுங்கள்.

பாண்டிச்சேரி காவல்துறை அதிகாரி (ராதிகா) மகன் பாண்டி (விஜய் சேதுபதி) ரவுடியாக விரும்புகிறார்ன். அவனது அம்மா அவனை காவல்துறையில் சேர்க்க விரும்ப அவனோ தன் நண்பர்களுடன் இணைந்து தன்னை ரவுடி போல் காட்டிக்கொள்கிறான். ரவுடியாக உருவாக விரும்புகிறான்.

காதம்பரி (நயன்தாரா) என்ற செவித் திறன் குறைபாடு உடைய பெண்ணைக் கணடதும் காதலில் விழுந்து அவளின் நட்பைப் பெறுகிறான். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான காதம்பரியின் தந்தை (அழகம்பெருமாள்) தன் மனைவியைக் கொன்ற தாதாவைக் (கிள்ளிவளவன்) கொல்லச் சென்று தொலைந்துபோகிறார்.

தனித்துவிடப்பட்ட காதம்பரி கிள்ளிவளவனைக் கொல்ல உதவினால் பாண்டியின் காதலை ஏற்பதாகச் சொல்கிறாள். காதம்பரி மீதான காதலுக்காகவும் தன்னை ரவுடி என்று நிரூபிப்பதற்காகவும் இந்த ஆபத்தான சவாலை ஏற்கிறான் பாண்டி.

அதன் பிறகு நடப்பது என்ன என்பதே மீதிக் கதை.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் முதல் படத்திற்குப் பிறகு கிடைத்த மூன்றாண்டு இடைவெளியை ஒரு தரமான பொழுதுபோக்குப் படத்தைத் எழுதி இயக்குவதற்குச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

ட்ரைலரில் ஊகித்தபடி நகைச்சுவை, காதல் மற்றும் உணர்ச்சிப்பூர்வன்மான காட்சிகளின் அழகான கலவையாக வந்திருக்கிறது இந்தப் படம். தொய்வின்றி நகரும் திரைக்கதை மொத்த படத்தையும் ரசித்துப் பார்க்க வைக்கிறது.

முதல் பாதி அழகான காதல், சூழ்நிலைகளால் ஏற்படும் நகைச்சுவை என்று நகர இரண்டாம் பாதியில் துடிப்பான ஆக்‌ஷன் காட்சிகளை எதிர்பார்த்தால் நகைச்சுவை கலந்த விறுவிறுப்புக் காட்சிகள் வருவது ஆச்சரியம் தரும் சுவாரஸ்யம். ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவையை கலப்பதில் நிகழும் சொதப்பல்கள் எதுவும் நிகழாமல் இரண்டுமே ரசிக்கத்தக்க வகையிலும் பெருமளவில் நம்பகத்தன்மையுடனும் கையாளப்பட்டிருக்கின்றன.

இதுபோன்ற கதைகளில் ஹீரோயிச சண்டைக் காட்சிகளுக்கு இடமிருந்தும் அதை தவிர்த்திருப்பது பாராட்டுகுரியது. அதே நேரத்தில் கமர்ஷியல் படங்களில் எதிர்பார்க்கப்படும் அமசங்கள் எதிலும் குறையில்லை. இதுவே படத்தை மனதுக்கு நெருக்கமானதாக்குகிறது. அடுத்து என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாத திரைக்கதை படத்துக்கு மிகப்பெரிய பலம்.

பாடல்கள் வேகத்தை ஓரளவு குறைப்பது, சில தேவைக்கேற்றபடியான திருப்பங்கள், இறுதிக் காட்சி தேவைக்கதிகமாக நீட்டிக்கப்பட்டிருப்பது ஆகியவை படத்தின் சின்னச் சின்னக் குறைகள்.

விஜய் சேதுபதியை இத்தனை இளமையான நகைச்சுவைக்கு அதிக இடமளிக்கும் பாத்திரத்தில் பார்ப்பது புத்துணர்ச்சியைத் தருகிறது. அவரும் இந்த வேடத்தை சிறப்பாகக் கையாண்டு கைதட்டல்களை அள்ளுகிறார்.

நயன்தாரா கூடுதல் அழகுடனும் இளமையுடனும் ஜொலிப்பதோடு காதுகேளாத பெண் பாத்திரத்தை அனாயசமாகக் கையாண்டு தன் நடிப்புத் திறமையும் நிரூபிக்கிறார். சொந்தக் குரலில் தமிழைத் தவறின்றிப் பேசியிருப்பதற்கு சிறப்புப் பாராட்டு.

முழுநீள வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் பார்த்திபன் தன் வழக்கமான முத்திரையுடன் பிரகாசிக்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் பார்வையாளர்களை ஆர்ப்பரிக்கவைக்கிறார். ராதிகா, ஆனந்த்ராஜ், அழகம்பெருமாள், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் உறுதுணைப் பாத்திரங்களை சரியாக நடித்து படத்துக்கு பக்கபலமாக அமைகிறார்கள். குறிப்பாக தாதாவாகத் துடிக்கும் அந்த தாத்தாவின் நடிப்பு பிரமாதம்.

அனிருத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் சிறப்பாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன, கண்ணான கண்ணே` மற்றும் `வரவா வரவா` பாடல்களில் விக்னேஷ் சிவனின் வரிகள் கவனத்தை ஈர்க்கின்றன.

ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு புதுமையான நிறக்கலவை மற்றும் கோணங்களைப் பயன்படுத்து கிறது. அதோடு பாண்டிச்சேரியையும் வட சென்னையையும் அசலாகவும் அழகாகவும் காட்ட உதவுவதில் ஒளிப்பதிவுடன் கலை இயக்கமும் கைகோர்க்கிறது.

மொத்தத்தில் நானும் ரவுடிதான்` குடும்பத்துடன் பார்த்து ரசிக்கத்தக்க படம்.

மதிப்பெண்- 3/5

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.