close
Choose your channels

பாகுபலி"க்கு இணையாகுமா புலி? ஒரு ஒப்பீடு

Friday, August 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி, வசூலிலும் மிகப்பெரிய சாதனை செய்த படம் சமீபத்தில் வெளிவந்த எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி திரைப்படம். ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. தென்னிந்திய அளவில் இதுவரை எந்தவொரு திரைப்படமும் செய்யாத சாதனை இது. கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' படத்தின் வசூல் சாதனையை 2015ஆம் ஆண்டுதான் முறியடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 'பாகுபலி' படத்தின் வசூலை முறியடிக்க வேறு ஒரு படம் வரவேண்டுமானால் இன்னும் பல வருடங்கள் ஆகும் அல்லது 'பாகுபலி' படத்தின் இரண்டாம்பாகம்தான் இந்த வசூலை முறியடிக்க முடியும் என விமர்சகர்கள் கூறிவந்தனர்.

ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று வெளியான விஜய்யின் 'புலி' படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது இந்த படம் அனேகமாக பாலிபலி படத்தின் வசூலை நெருங்கிவிடும் அல்லது முறியடித்துவிடும் என்றே கூறப்படுகிறது.

பாகுபலி படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா, தமன்னா, சத்யராஜ் உள்பட பல பிரபலங்கள் நடித்ததால் அந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றதாக கூறப்பட்டது. அதேபோல் 'புலி' படத்திலும் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், உள்பட பிரபல நட்சத்திரங்களின் கூட்டமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பிரபாஸுக்கு இருக்கும் மாஸுக்கு எந்த வகையில் விஜய் குறைந்தவர் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். பாகுபலி படத்தில் இடம்பெற்ற பிரபாஸின் கேரக்டருக்கு எந்த விதத்திலும் விஜய்யின் 'புலி' கேரக்டர் குறைந்ததில்லை என்பதை டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. காதல், வீரம், நகைச்சுவை, பிரமாண்டம் என அனைத்திலும் பாகுபலிக்கு ஈடுகொடுக்கும் வகையில்தான் 'புலி' படம் அமைந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

பாகுபலியில் பிரபாஸுக்கு அடுத்ததாக முக்கிய கேரக்டர் ரம்யா கிருஷ்ணன். பார்வையிலே பல அர்த்தங்களை கொடுக்கும் அழுத்தம் கொடுக்கும் அந்த சிவகாமி கேரக்டருக்கு இணையாக 'புலி'யில் ஸ்ரீதேவி கேரக்டர் இருக்கும் என நம்பப்படுகிறது. டிரைலரில் ஸ்ரீதேவியின் தோற்றம், அவரது மிடுக்கான காஸ்ட்யூம், ஆயிரம் அர்த்தங்கள் கொடுக்கும் பார்வை, சீரியஸ்னஸ் ஆகியவை கண்டிப்பாக சிவகாமி கேரக்டருக்கு அனைத்து வகையிலும் ஈடுகொடுக்கும் வகையில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாகுபலியில் ஒரு வலிமையான வில்லன் கேரக்டர் இருப்பதால்தான் ஹீரோ கேரக்டரின் வீரம் வெளியே தெரிந்தது. மிக முக்கிய நடிகரான ராணா வில்லன் கேரக்டரில் மிக அற்புதமாக நடித்திருந்தர். அதே போல் 'புலி' படத்திலும் சுதீப் கேரக்டர் அதிகபட்ச வில்லத்தனத்துடன் அமைக்கப்பட்டுள்ளதை டிரைலரிலேயே பார்த்தோம்.

பாகுபலியில் தமன்னாவின் காதல் காட்சிகளுக்கு இணையாக 'புலி' படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகிய இரண்டு முன்னணி நாயகிகள் இருப்பதால் காதல் காட்சிகளுக்கும் 'புலி' படத்தில் எவ்வித குறையும் இருக்காது என கூறப்படுகிறது.

மேலும் பாகுபலி படத்தில் இல்லாத நகைச்சுவை 'புலி' படத்தில் கண்டிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. தம்பி ராமையா, ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் உள்பட ஒரு நகைச்சுவை கூட்டமே இருப்பதால், அதுவும் இந்த கேரக்டர்கள் அனைத்துமே சித்திரக்குள்ளர்களாக இருப்பதால் கண்டிப்பாக நகைச்சுவையில் 'புலி' படம் கலகலக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல் பாகுபலியில் இன்னொரு முக்கிய கேரக்டர் சத்யராஜின் கட்டப்பா. ராஜவம்சத்துக்கு விசுவாசியான இந்த கேரக்டருக்கு சமமான கேரக்டராக புலி 'படத்தில் பிரபுவின் கேரக்டர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசையை பொருத்தவரை கீரவாணிக்கு எந்த விதத்திலும் தேவிஸ்ரீ பிரசாத் குறைந்தவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. 'புலி' படத்தின் டிரைலரிலேயே பிஜிஎம்-இல் கலக்கியிருந்த தேவிஸ்ரீ பிரசாத் மெயின் படத்திலும் கண்டிப்பாக தனது அதிகபட்ச திறமையை வெளிப்படுத்தியிருப்பார் என்றே நம்பலாம்.

பாகுபலியில் ஒப்பிடமுடியாத அளவுக்கு இருக்கும் ஒரே காட்சி போர்க்காட்சியில் வரும் கிராபிக்ஸ். லார்டு ஆப் த ரிங்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களுகு இணையாக அமைந்த போர்க்காட்சியில் 'பாகுபலி' படக்குழுவினர் செய்திருந்த கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அளவுக்கு 'புலி' படத்தில் அமைந்திருக்குமா? என்ற சந்தேகம் மட்டும் அனைவருக்கும் உள்ளது. டிரைலரை வைத்து பாகுபலிக்கு இணையான சிஜி பணிகள் 'புலி'யில் இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது எனினும் உலகின் பல நாடுகளில் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளை பிரித்து ஒரு பெரிய டீமே இந்த பணியில் இருந்ததாக வெளிவந்துள்ள செய்தியை பார்க்கும்போது கண்டிப்பாக பிரமாண்டம் இந்த படத்தில் இருக்கும் என்பதை நம்பலாம்.


பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு இணையான இயக்குனராக இருக்கும் பாகுபலி' இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் திறமை, அனுபவம் ஆகியவற்றை கண்டிப்பாக சிம்புதேவனிடம் எதிர்பார்க்க முடியாது. என்றாலும் மிகப்பெரிய பட்ஜெட், மிகப்பெரிய நடிகர், பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு ஆகியவற்றை சிம்புதேவன் கண்டிப்பாக நன்றாக பயன்படுத்தியிருப்பார் என்பது மட்டும் ஏற்றுக்கொள்ளலாம்.

மொத்தத்தில் 'பாகுபலி'யை முறியடிக்கும் அத்தனை அம்சங்களும் விஜய்யின் 'புலி'யில் இருப்பதாகத்தான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கின்றது. இதுமட்டும் நடந்துவிட்டால் கண்டிப்பாக விஜய்க்கு மட்டுமின்றி தமிழ் சினிமா உலகிற்கே ஒரு மைல்கல் என்றுதான் கூறவேண்டும். 'பாகுபலி'யின் சாதனையை புலி முறியடித்துவிட்டால் பாகுபலிக்கு எவ்வித சிறுமையும் ஏற்படப்போவதில்லை. மாறாக தென்னிந்திய திரையுலகம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பது மட்டும் உண்மை. எனவே இந்த படம் புதிய சாதனையை படைக்க நமது அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.