close
Choose your channels

தெலுங்கு தேசத்தில் சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிக்கட்டி பறந்த என்.டி.ஆர் பிறந்த தினம் இன்று...

Thursday, May 28, 2020 • தமிழ் Comments

தெலுங்கு தேசத்தில் சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிக்கட்டி பறந்த என்.டி.ஆர் பிறந்த தினம் இன்று...

 

என்.டி.ஆர் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட தெலுங்கு திரைப்பட நடிகரும், இயக்குநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், மக்களால் போற்றப்படும் ஒரு மாபெரும் தலைவருமாக வலம் வந்த திரு என்.டி.ராமாராவ் பிறந்த தினம் இன்று. இவர் பிறந்தது 1923 இல். ஆந்திர மாநிலம் நிம்மகுரு என்ற கிராமத்தில் வளமான, செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இயற்பெயர் நன்டமுரி தாரக ராமாராவ். அப்பா ஒரு விவசாயி. சொந்த ஊரில் தொடக்கக் கல்வி பயின்ற இவரை, அவரது மாமா தத்து எடுத்துக் கொண்டார். எனவே இவரது வாழ்க்கை விஜயவாடாவிற்கு இடம்பெயர்ந்தது.

இளமையிலேயே பாடும் திறமையை வளர்த்துக் கொண்டார். அற்புதமான குரல் வளமும் இவரிடம் இருந்தது. இளம் வயதிலேயே குடும்பம் வறுமைக்குத் தள்ளப்பட்டதால் தனது 20 ஆம் வயதில் தான் பல்கலைக் கழகத்தைப் பார்க்க முடிந்தது. தனது கல்வி ஞானத்தை வைத்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப் பெறவும் செய்தார். ஆனால் அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் இவருக்கு அதில் நாட்டமில்லை என்பது தான் முக்கியம். வேலையை விட்டுவிட்டு 1947 இல் மன தேசம் என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். அன்று தொடங்கிய இவரது ஏற்றம் தெலுங்கு தேசத்தில் மாபெரும் மக்கள் தலைவராக மாறும் வரை ஒருபோதும் ஓயவே இல்லை.

அடுத்து, பி.ஏ. சுப்பாராவின் தயாரிப்பில் உருவான ‘பில்லேடுரி பில்ல’ படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்த படம் தெலுங்கில் மட்டுமல்ல தென்னிந்தியாவை ஒரு கலக்கு கலக்கியது. அட இதென்ன பிரமாதம்...  1951 இல் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இவர் நடித்து வெளிந்த ‘பாதாள பைரவி’ படம் ஒட்டு மொத்த இந்தியாவிலும் அபார வெற்றியை பெற்றுத் தந்தது. இவரது நடிப்பில் வெளிவந்த லவகுசா, மாயா பஜார், மல்லேஸ்வரி, சந்திரஹாரம் ஆகியவை மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறது. இதைத்தவிர பல புராணப் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். கண்ணன், கிருஷ்ணன் என எந்த வேடமாக இருந்தாலும் தெலுங்கு உலகம் இவரைத்தான் நாடியது.

இந்த தாக்கத்தால் மக்களும் ஒருகாலத்தில் இவரை கிருஷ்ணன் வேடத்திலேயே வைத்துப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். தெலுங்கு திரையுலகின் இணையில்லா சூப்பர் ஸ்ராகவும் வலம் வர ஆரம்பித்தார். 40 வருட சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் கூட 15 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். ஒரு சில இந்தி மற்றும் கன்னடப் படங்களிலும் இவர் நடித்து இருக்கிறார். 10 முறை ஃபிலிம்பேர் விருதுகளையும் வாங்கிக் குவித்து இருக்கிறார். இவரை சிறப்பிக்கும் விதமாக இந்திய அரசு 1968 இல் தேசிய விருதையும் வழங்கியது. அதோடு பத்ம ஸ்ரீவிருதும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

ஆந்திரப் பல்கலைக் கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி இருக்கிறது. நடிப்பு மட்டுமல்லாமல் கதை, வசனத்தையும் இவர் எழுதியிருக்கிறார். நடிப்புக்கு பெயர் போன இவர் 1980 இல் திரையுலகில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 1982 இல் தெலுங்கு தேச மக்கள் கட்சியை உருவாக்கினார். ஏற்கனவே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மனிதராகவும் தெய்வ கடாச்சத்தோடும் வலம் வந்த இவரை தெலுங்கு மக்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். 1983-1994 க்கு இடையில் 3 முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறார். இன்றைக்கும் ஆந்திர மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்து இருக்கும் என்.டி ராமராவ் 1996 இல் தனது 72 வயதில் மாரடைப்பால் காலமானார். தமிழ் ரசிகர்கள் “கல்யாண சமையல் சாதம், காய் கறிகளும் பிரமாதம்” என்ற கும்பகர்ணன் வேடத்தில் இன்றைக்கும் நினைவு வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz