close
Choose your channels

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிறப்பு கட்டுரை

Saturday, October 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற நடிகர், ஒப்பற்ற கலைஞர் என்று போற்றபடும் செவாலியே சிவாஜி கணேசனுக்கு இன்று பிறந்த நாள். நடிப்புக்கு இலக்கணம் வகுத்த சிவாஜி கணேசன் குறித்து ஏற்கனவே பல சிறப்புகளை நாம் பார்த்த நிலையில் இந்த கட்டுரையிலும் அவற்றில் சிலவற்றை மீண்டும் நினைவில் கொள்வோம்.
இன்று முன்னணியில் உள்ள பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருந்த, இருந்து வரும் சிவாஜி கணேசன் 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தஞ்சாவூர் அருகில் உள்ள சூரக்கோட்டை என்ற கிராமத்தில் பிறந்தார்.
கணேசன் என்ற பெற்றோர் வைத்த பெயர் சிவாஜி' கணேசனாக மாறிய வரலாறு தெரியுமா? சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் மராட்டிய மன்னன் சிவாஜி வேடத்தில் நடித்த கணேசனின் நடிப்புத்திறனை புகழ்ந்தை தந்தை பெரியார், அவரை சிவாஜி` கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து இன்று வரை அவர் சிவாஜி கணேசன் என்றே அழைக்கப்படுகிறார்.

சிவாஜி கணேசனின் முகம் மட்டும் நடிக்காது. அவரது கை, கால், உடல் மட்டுமின்றி நகம் கூட நடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான வசன உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன், பாத்திரத்தின் தன்மைக்கேற்ப பாத்திரமாகவே மாறிவிடும் அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றின் காரணமாக சிவாஜி கணேசன் நடிப்புச் சக்ரவர்த்தி என்றும் நடிகர் திலகம் என்றும் போற்றப்படுகிறார்.
பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானா சிவாஜி கணேசன் முதல் படத்திலேயே கலைஞர் கருணாநிதியின் வசனத்தை உச்சரிக்கும் பெருமையை பெற்றார். கலைஞரின் கூர்மையான வசனமும், சிவாஜி கணேசனின் கம்பீர குரலும் அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாயிற்று. குறிப்பாக கடவுள் குறித்து பூசாரியிடம் பேசும் வசனம், கிளைமாக்ஸ் நீதிமன்ற காட்சிகலும் இன்றுள்ள தலைமுறையினர்களையும் கவரும் என்பதில் எள்ளளவு கூட சந்தேகமில்லை.
நேரந்தவறாமை என்பது சிவாஜி கணேசன் முக்கிய கொள்கை. ஏழரை மணிக்கு படப்பிடிப்பு என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூட அவர் தாமதமாக படப்பிடிப்புக்கு சென்றது இல்லை என்பது அவர் எந்த அளவுக்கு சினிமாவை நேசித்துள்ளார் என்பதை நிரூபிக்கின்றது. இதை இப்போதுள்ள ஒவ்வொரு நடிகரும் கடைபிடிப்பது மிகவும் அவசியம்
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி, பகத்சிங் திருப்பூர் குமரன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்த ஒரே நடிகர் சிவாஜி மட்டுமே
அதேபோல் சிவபெருமான், பெருமாள், கிருஷ்ணர், முருகன், உள்பட பல தெய்வங்களின் வேடங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப்பெரிய கட்–அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி என்ற படத்திற்காக பிரமாண்டமான கட்-அவுட் வைக்கப்பட்டது.
சிவாஜிகணேசன் தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு, 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது! பின்னாளில் இதே மனோகரா' திரைப்படமாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சிவாஜி கணேசன் நடித்த மொத்த படங்கள் 301. இதில் தமிழ்ப் படங்கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கெளரவத் தோற்றம் 19 படங்கள்
சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. இந்த படத்தில் இருவரும் முதலில் நண்பர்களாகவும், பின் ஒரு பெண்ணால் எதிரியாகவும் மாறுவார்கள். இந்த படத்தால் இருவரின் ரசிகர்களிடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டதால் இதற்கு பின் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவே இல்லை. இருப்பினும் இருவரும் இணைபிரியாத சகோதரர்கள் போல் கடைசி வரை வாழ்ந்தனர்.
சிவாஜிக்கு கடைசி வரை நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு. அதுதான் தனக்கு சிவாஜி' என்ற பட்டத்தை கொடுத்த பெரியாரின் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது.
சிவாஜி கணேசன் ஒரு படத்தை கூட இயக்கவில்லை என்று கூறுவதுண்டு. ஆனால் அவர் ஒரு திரைப்படத்தை இயற்றி இருக்கிறார். முழுப் படத்தையும் இயக்கவில்லை என்றாலும், ஒரு படத்தின் சில பகுதிகளை அவர் இயக்கியுள்ளார் என்று வைத்துக் கொள்ளலாம். "ரத்தபாசம்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாதி படத்திற்கு மேல் இயக்க முடியாததால், மீதிப் படத்தை சிவாஜியே இயக்கினார். படத்தின் டைட்டிலில் இயக்கம் என்ற பெயர் வர வேண்டிய இடத்தில் யார் பெயரும் திரையில் வராமல், சிவாஜி கணேசனின் குளோசப் போட்டோக்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்படும்.
நடிகர் திலகம் நடித்த படங்களில், பாரதியார் பாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரே படம், "கப்பலோட்டிய தமிழன்.'
பாடல்களே இல்லாத முதல் தமிழ்த் திரைப்படம் நடிகர் திலகம் நடித்த "அந்தநாள்' படமாகும்.
இலங்கை நடிகை மாலினி பொன்சேகா நடித்த ஒரே தமிழ்ப் படம், சிவாஜி கணேசன் நடித்த "பைலட் பிரேம்நாத்' படம் ஆகும்.
எம்.ஜி.ஆரை வைத்து பல திரைப்படங்கள் தயாரித்த தேவர் பிலிம்ஸ், சிவாஜியை வைத்து தயாரித்த ஒரே படம் 'தர்மராஜா'
அதேபோல் பல எம்.ஜி.ஆர் படங்களை தயாரித்த சத்யா மூவீஸ், சிவாஜியை வைத்து தயாரித்த ஒரே படம் 'புதிய வானம்'
தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள ஈஸ்ட்மென் வண்ணப் படம், நடிகர் திலகம் நடித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்' படமாகும்
நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த படங்கள் உத்தம புத்திரன், எங்க ஊர் ராஜா, கெüரவம், என் மகன், மனிதனும் தெய்வமாகலம், சந்திப்பு, ரத்த பாசம், சிவகாமியின் செல்வன், பாட்டும் பரதமும், என்னைப் போல் ஒருவன், புண்ணிய பூமி, எமனுக்கு எமன், விஸ்வரூபம், வெள்ளைரோஜா.
மூன்று வேடங்களில் பலே பாண்டியா தெய்வ மகன், திரிசூலம், ஆகிய படங்களிலும் நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களிலும் நடித்துள்ளார்.
சிவாஜி நடித்த முதல் படம் பராசக்தி. கடைசி படம் பூப்பறிக்க வருகிறோம். சிவாஜி கணேசன் சுமார் 100 இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்துள்ளார். சிவாஜியை வைத்து அதிக படங்களை இயக்கியவர்கள் ஏ.சி.திருலோகசந்தர் (20 படங்கள்), ஏ.பீம்சிங் (17 படங்கள்) .
படத் தயாரிப்பைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தை வைத்து அதிக (17 படங்கள்) படங்களை தயாரித்தவர் நடிகர் கே.பாலாஜி மட்டுமே.
சிவாஜியுடன் ஜோடியாக நடித்த முதல் நடிகை பண்டரிபாய். பின்னாளில் இவர் பல படங்களில் அவருக்கே அம்மாவாக நடித்துள்ளார். சுமார் 55 கதாநாயகிகள் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களில் கே.ஆர்.விஜயா 40 படங்களிலும், பத்மினி 38 படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்கள்.
அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா, என ஐந்து முதல்வர்களுடன் திரையுலகில் சிவாஜி கணேசன் பணியாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முதல் டிரைலர் உருவானது சிவாஜி கணேசன் நடித்த திரும்பிப்பார் படத்துக்குத்தான். இந்த படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்
  • 1960 இல் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்க பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனுக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் பெற்று தந்தது.

  • 1966 இல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

  • 1969 இல் தமிழக அரசு வழங்கிய சிறந்த நடிகர் விருது பெற்றார்.

  • 1969 இல் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது பெற்றார்.

  • 1984 இல் பத்மபூஷன் விருது பெற்றார்.

  • 1986 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.

  • 1995 இல் பிரான்ஸ் நாட்டில் வழங்கப் பட்ட செவாலியே விருது பெற்றார்.

  • 1996 இல் குடியரசுத் தலைவரிடம் தாதாசாகிப் பால்கே விருது பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.