close
Choose your channels

அருண்விஜய்யின் 'குற்றம் 23'. திரை முன்னோட்டம்

Thursday, March 2, 2017 • தமிழ் Comments

திரையுலகின் பின்னணி இருந்தும், 'முறை மாப்பிள்ளை' தொடங்கி பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தும் கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க கடந்த இருபது வருடங்களாக போராடி வருபவர் நடிகர் அருண்விஜய். இந்த நிலையில் தான் அஜித்துடன் 'என்னை அறிந்தால்' படத்தின் விக்டர் என்ற கேரக்டர் அவருக்கு புதிய அந்தஸ்தை கொடுத்தது. விக்டராகவே அந்த கேரக்டரில் வாழ்ந்த அவரது நடிப்பு அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. வில்லனாக ஆக்ரோஷமாக நடித்த அருண்விஜய் தற்போது போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள 'குற்றம் 23' என்ற திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகின்றது. வெளியாகும் முன்பே பெரும் எதிர்பார்ப்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்

'ஈரம்', 'வல்லினம்', 'ஆறாது சினம்' என மூன்று விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூடிய சஸ்பென்ஸ் படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகனின் அடுத்த படம் தான் இந்த 'குற்றம் 23'. பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய மெடிக்கல் க்ரைம் கதைக்கு உண்மைச்சம்பவங்கள் சிலவற்றை அறிவழகனின் திரைக்கதையுடன் இணைத்து உருவாக்கப்பட்ட படம் தான் இந்த 'குற்றம் 23' . இந்த படத்தின் கதையை கேட்டு நடிக்க ஓப்புக்கொண்டது மட்டுமின்றி இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் ஆனார் அருண்விஜய்.

சமுத்திரக்கனியின் 'சாட்டை' உள்பட ஒருசில படங்களில் நடித்த மஹிமா நம்பியார் அருண்விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடங்களில் தம்பி ராமையா, வம்சி கிருஷ்ணா, விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். பாஸ்கரன் ஒளிப்பதிவில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

'ஜில் ஜங் ஜக்' உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை சத்யம் திரையரங்கில் பல திரையுலக விஐபிக்கள் கலந்து கொண்ட விழாவில் வெளியானது. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளர். இவற்றில் 'பொறி வைத்து' என்று தொடங்கும் பாடல் ஏற்கனவே நல்ல ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் குறித்து விஷால் சந்திரசேகர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது: ஒரு போலீஸ்காரரின் மற்றொரு மென்மையான பக்கத்தை பிரதிபலிக்கும் பாடல் தான் இந்த பொறி வைத்து' பாடல். அவர் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் சிறைச்சாலை, துப்பாக்கி போன்ற சொற்களுக்கு, தூய தமிழாக்கம் கொடுத்து இந்த பாடலை எழுதி இருக்கிறார் பாடலாசிரியர் விவேகா' என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் அறிவழகன் பேசியபோது, 'ஒரு தரமான மெடிக்கல் – கிரைம் – திரில்லர் திரைப்படத்தை நான் உருவாக்கி இருக்கிறேன். இந்த படத்தில் ஒரு வலுவான கருத்தையும் நான் சொல்லியிருக்கிறேன். என்னை அறிந்தால்` படத்தில் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட அருண் விஜயை , இந்த குற்றம் 23` படம் மூலம் சட்டத்தை பாதுகாக்கும் ஒரு காவல் துறை அதிகாரியாக ரசிகர்கள் காண்பார்கள். தன்னுடைய கதாபாத்திரம் கன கச்சிதமாக உருவாக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகர் அருண் விஜய். முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய், அவருடைய வேடம் மிக சரியாக அமைய பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். ஒரு புதிய நட்சத்திர நாயகனின் உதயத்தை, ரசிகர்கள் விரைவில் உறுதி செய்வார்கள்' என்று கூறினார்.

'விக்டர்' என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வெற்றி பெற்ற அருண்விஜய் இந்த 'குற்றம் 23' படத்தில் வெற்றிமாறன்' என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு வெற்றி கிடைத்து முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் இடம்பெறுவரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்த படத்தின் விமர்சனத்தை வரும் வெள்ளியன்று விரிவாக பார்ப்போம்.

Get Breaking News Alerts From IndiaGlitz