close
Choose your channels

சின்மயி-வைரமுத்து மீடூ விவகாரம்: முதல்முறையாக கருத்து சொன்ன கபிலன் வைரமுத்து

Monday, October 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை மீடூவில் கூறியபோது பலரும் முன்வைத்த கேள்விகளுள் ஒன்று சின்மயி இத்தனை ஆண்டுகளாக இதை ஏன் சொல்லவில்லை? என்பதுதான். ஆனால் சின்மயி குற்றச்சாட்டுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்துதான் கபிலன் வைரமுத்து ஒரு நீண்ட அறிக்கையின்மூலம் விளக்கம் அளித்துள்ளார். ஒரு குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கவே ஒரு மாதமா? என்ற கேள்வியும் அனைவர் மனதில் எழுகிறது.கபிலன் வைரமுத்து கூறிய விளக்கம் இதுதான்:

ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்.

வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தினால் தீர்வை மையப்படுத்துவது தான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி, நான் என்பது மேற்கத்தியம், நாம் என்பது இந்தியம். நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை, நாடு நிம்மதியாக இருந்தால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்பது நம் நம்பிக்கை.

தன்வாழ்வே அவர்களின் வாழ்வியல். குடும்ப அமைப்பே நம் அடிப்படை. உலகப் பொருளாதாரச் சரிவில் இருந்து இந்தியாவை ஓரளவிற்கு பாதுகாத்தது குடும்ப கட்டமைப்பே. அதுவே பிற நாடுகள் நம்மைப் பார்த்து பொறாமைப்படக் கூடிய பண்பு. நம் மண்ணில் தோன்றிய பெண்ணுரிமை இயக்கங்கள் ஆண் - பெண் சரிசமமாக இயங்கும் குடும்ப அமைப்பை ஒரு முக்கியக் கனவாக கருதின.

தற்போது மேல்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் அமைப்புகள் அந்தக் குடும்ப அமைப்பைச் சிதைக்கும் நோக்கோடு செயல்படுகிறதோ என ஐயம் எழுகிறது. எந்த ஆதாரமும் தொலைநோக்கமும், இல்லாமல் பொதுவெளியில் ஆண், பெண்ணின் மீது பெண் ஆணின் மீது பழிசொல்லும் போக்கு மிகவும் அபாயகரமானது. Metoo என்று இந்த உலகளாவிய அமைப்பு எதை நோக்கியது. அது எங்கே திரை மாறுகிறது என தீர்க்கமாகச் சொல்லும் பக்குவம் எனக்கில்லை.

ஆணால், பெண்ணுரிமைக்காக நம் முன்னோடி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் அவர்களின் கருத்தியலும் இது போன்ற அமைப்புகளைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுமென நம்புகிறேன். அப்பாவைத் தமிழர்களின் நிகழ்கால அடையாளங்களில் ஒன்று என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது பெருமைப்படுவேன். அது சிலருக்கு அதீதமாக இருக்கலாம். சிலர் மறுக்கலாம். ஆனால் அவர் தன்னம்பிக்கையின் அடையாளம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

அவர் பிறக்கும்போதே வெள்ளை ஜிப்பாவோடு பிறக்கவில்லை. பள்ளிக்கு அணிந்து செல்ல மாற்றுச் சீருடை வாங்கும் வசதி அவருக்கு இல்லை. உயர்பள்ளி செல்லும்வரை செருப்பு அணியும் சூழல் இன்றி காட்டிலும், மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து கல்வி கற்றவர் அவர். இந்திய வரைப்படத்தில் இடம் பெறாத ஒரு கிராமத்தில் பிறந்து இந்தியாவின் புகழ் மிக்க நபர்களில் ஒருவராக அவர் உயர்ந்திருப்பது இன்றைய தொழில்நுட்ப தலைமுறைக்குத் தெரியாது.

படிக்கும் பிராயத்தில் வறுமையின் காரணமாக வீட்டில் போதிய உணவில்லாத காரணத்தால் தோட்டத்தில் இருந்தத் தக்காளிகளைப் பறிந்த்துத் தின்றுவிட்டு பரீட்சை எழுதப் போனவரைப் பற்றித் தெரியாது. கல்லூரியில் வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த அவர் எத்தனை ஊர்களுக்கு கடன் கேட்கச் சென்றார் என்ற அவமானம் தெரியாது.

அப்பாவும் வீட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது தெரியாது. தமிழ்க் கவிஞராக ஒருவர், தமிழ் பேராசிரியராக ஒருவர் என இருவருமே தமிழோடு தமிழாக அந்தச் தமிழன் தொட்டிலில் இரண்டு குழந்தைகளை வளர்த்த வரலாறு தெரியாது. அங்குலம் அங்குலமாக அவர் தன் வாழ்க்கையைச் செதுக்கியிருக்கிறார்.

கிராமங்கள் முற்றிலும் புறக்கணிப்படுகிற நவீன சூழலில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் இருந்து எழுந்த அவருடைய வாழ்வு இன்று எத்தனையோ இளைஞர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை முன்ணுதாரணம். அவரது எழுத்தைப் பற்றி வெளிவராத ஆய்வுகள் இல்லை. அவை பெறாத விருதுகள் இல்லை. ஆனால், அவரது எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது, பாடம் நிறைந்தது. அவரது பெருமைகளை அழுக்கப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள்.

தற்போது அவர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள். அது எப்படியும் இருக்கட்டும். அவை சட்டரீதியாக பதிவாகட்டும். உண்மை வெல்லட்டும்.

இந்தப் பிரச்சினையை ஒரு பிரம்மாண்டமான பொழுதுபோக்காகச் சித்தரித்து நாட்டில் நிகழும் வேறு பல பிரச்சினைகளிலிருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கபிலன் வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.