close
Choose your channels

சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: 'ஜெய்பீம்' இயக்குனரின் நீண்ட விளக்கம்!

Sunday, November 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் உருவாகிய ‘ஜெய்பீம்’ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் நீண்ட விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. 'ஜெய் பீம்' படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம் பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என விரும்பினேன். 1990களில் ராஜாக்கண்ணு, விர்பலிங்கம் போன்ற பழங்குடிகள் மரணம், சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா போன்ற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நிகழ்ந்த துயரம் என பல்வேறு அதிகார அத்துமீறல்கள் நடந்தன. இன்று வரையிலும் மக்களுக்கு சமூக பாதுகாப்பு என்பதோடு அது தொடரவே செய்கின்றன.

எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது நடத்திய வழக்கில் காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து செயல்பட்டால் எளிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை நம்பிக்கை வெளிச்சம் தரும் வகையில் படமாக்கினோம்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், 'ஜெய் பீம்' திரைப்படத்தைப் பார்த்துப் பாராட்டியதோடு பழங்குடி மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் இத்திரைப்படத்தின் நோக்கத்தை முழுமை பெற செய்தார். அதற்காக எனது மனப்பூர்வமான நன்றிகளை நமது முதல்வர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல, இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை.

பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.

சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்தக் காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், 'போஸ்ட் புரடெக்ஷன் பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. அமேசான் ப்ரைமில் படம் வெளிவரும் முன்பே. பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட , படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம்.

நவம்பர் மாதம் 1-ம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்தும், காலண்டர் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக நவம்பர் 2-ம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு திரு. சூர்யா அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது.

தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இத்திரைப்படத்தில் திரு. சூர்யா அவர்கள், பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தார். இயக்குநராக என்பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மன அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இக்கட்டான சூழலில் அக்கறையோடு எங்களுடன் நிற்கிற திரையுலகத்தினருக்கும், அரசியல், இயக்கங்களுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், ஆதரவளித்த முகமறியா அனைத்து நட்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இவ்வாறு ஞானவேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.