close
Choose your channels

ஜூங்கா' என்றால் என்ன? இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி கூறிய தகவல்

Wednesday, June 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டியன் உள்பட பலர் நடித்த 'ஜூங்கா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்த படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பேசியதாவது: இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரேமாதிரியாக  இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இந்த படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில் தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விசயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்.

இதில் பஞ்ச் இருக்கா? இல்லையா? என்று என்னிடம் கேட்பதை விட, அதை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை டயலாக்காகத்தான் பேசுகிறோம். ஜுங்கா என்றால் என்ன? என்பதை படத்தில் ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப் பற்றி விரிவாக சொல்லமுடியாது. இந்த படத்தில் நடிக்கும் டான் கேரக்டருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது. 

படத்தில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன்லைன் பஞ்ச் என்னோட ஃபேவரைட். எந்த சூழலாக இருந்தாலும் அதனை எளிதாக கையாளக்கூடிய திறமையை நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார்.’ என்று கூறினார்.

படத்தின் இயக்குநர் கோகுலிடம் இது பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமா? என கேட்டபோது,‘ எல்லோருக்கும் தெரியும். நான் ஏற்கனவே செய்த படத்தை மீண்டும் இயக்குவதில்லை. இது பாலகுமாரா இரண்டாம் பாகமல்ல. அதற்கும் மேல். இந்த படத்தில் பிரம்மாண்டமாக காமெடி இருக்கிறது. ஆக்சனும் பிரம்மாண்டமாக இருக்கும். பாலகுமாரா யூத் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஜுங்கா ஆல் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும் போது சயீஷா அளித்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. மைனஸ் 9 டிகிரி குளிரில் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, குளிர் தாங்க முடியாமல் தவித்தார். அவரது உதடுகள் நீலநிறமாக மாறியது. அவரது அம்மா பதறினார். நாங்களும் உடனே மருத்துவ உதவிக்காக அவரை அனுப்பி வைத்தோம். ஆனால் அந்த கார் திரும்பவும் படப்பிடிப்பு தளத்திற்கே வந்தது. இன்னும் சில ஷாட்கள் தான் மீதமிருக்கிறது. அதை நடித்து விட்டு மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்கிறேன் என்றார். இதை என்னால் மறக்க முடியாது.’ என்றார்.

படத்தின் நடித்த அனுபவத்தைப் பற்றி சயீஷாவிடம் கேட்டபோது,‘ இப்போது தான் தமிழ் பேசுவதற்கு கற்றுக் கொண்டு வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன். வெளிநாட்டில் நடைபெற்ற படபிடிப்பின் போது விஜய் சேதுபதி சார், இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், ஒளிப்பதிவாளர் டட்லீ ஆகியோரின் உதவி மறக்க முடியாது.’ என்றார்.

தயாரிப்பாளர் அருண் பாண்டியன் பேசும் போது,‘நடிகர் விஜய் சேதுபதி எதையும் எதிர்பார்க்காதவர். இவரை போன்ற ஒரு மனிதரை என்னுடைய நாற்பது ஆண்டு கால திரையுலக பயணத்தில் கண்டதில்லை. படத்தைப் பற்றி இயக்குநர் என்னிடம் என்ன சொன்னாரோ அதை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவான படம்.’ என்றார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும் போது,‘ நடிகர் விஜய் சேதுபதியுடன் நான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும் போது, என்னிடம் வந்து இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா? என கேட்பார். அப்போது உனக்கென்னப்பா குறை. பார்க்க லட்சணமாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய் என்று வாழ்த்தினேன். ஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன். ஒரு தாய் தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படி பெருமிதமாக பார்த்து கர்வப்பட்டு கொள்வாரோ அதே போல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.